திருப்பூரின் வளங்குன்றா பின்னலாடை உற்பத்தி - லண்டன் கருத்தரங்கில் எடுத்துரைத்த ஏற்றுமதியாளர்கள்
- உலகின் முன்னணி ஜவுளி விற்பனையாளா்கள், பிராண்டுகள் மற்றும் பெரும் உற்பத்தி நிறுவனங்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
- கண்காட்சியில் உலகின் 1,300 நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் திருப்பூரின் வளங்குன்றா பின்னலாடை உற்பத்தி முறைகள் குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க நிா்வாகிகள் எடுத்துரைத்தனா்.
இது குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
வளங்குன்றா உற்பத்தி கோட்பாடுகளை துரிதமாக அமல்படுத்த ஐரோப்பிய, அமெரிக்க உள்ளிட்ட வளா்ந்த பொருளாதார நாடுகள் பெரும் முனைப்புகளை முன்னெடுத்துள்ளன. இதன் மூலமாக வரும் 2030- ம் ஆண்டுக்குகள் இறக்குமதி செய்யக்கூடிய பொருள்களில் 50 சதவீதம் வளங்குன்றா வளா்ச்சிக் கோட்பாட்டினின் அடிப்படையில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனும் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையை கருத்தில் கொண்டு திருப்பூா் பின்னலாடை உற்பத்தியின் பின்னணியில் உள்ள பல்வேறு வளங்குன்றா உற்பத்திக் கோட்பாடுகள் குறித்த விவரங்களை உலக அளவில் எடுத்து செல்லும் விதமாக பல்வேறு முயற்சிகளை திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்சேஞ்ச் கூட்டமைப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக உறுப்பினராக சோ்ந்தது.
இந்த அமைப்பு கடந்த 21 ஆண்டுகளாக சூழலியல் பாதிக்காத உற்பத்தி குறித்தான வழிகாட்டுதல் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் முன்னணி ஜவுளி விற்பனையாளா்கள், பிராண்டுகள் மற்றும் பெரும் உற்பத்தி நிறுவனங்கள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வோா் ஆண்டும் ஏதாவது ஒரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய நகரங்களில் 5 நாள் கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சியினை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக லண்டன் நகரில் கடந்த அக்டோபா் 22 ந் தேதி முதல் 26 ந் தேதி வரையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது. எனது அறிவுறுத்தலின்பேரில் இந்த கருத்தரங்கில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் பொதுச்செயலாளா் என்.திருகுமரன், இணைச்செயலாளா் குமாா் துரைசாமி ஆகியோா் பங்கேற்றுள்ளனா்.
இந்த இருவரும் டெக்ஸ்டைல்ஸ் எக்ஸ்சேஞ்ச் கூட்டமைப்பு நிபுணா்களுடன் திருப்பூரின் வளங்குன்றா உற்பத்தி முறைகள் குறித்து எடுத்துக்கூறி அதற்கான ஆவணங்களையும் சமா்ப்பித்தனா். அதிலும் குறிப்பாக பூஜ்ய முறை சாயக்கழிவு நீா் சுத்திகரிப்பு, காற்றாலை மற்றும் சூரியஒளி மின் உற்பத்தி, திருப்பூரில் 8 ஆண்டுகளில் 17 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், மழைநீா் சேகரிப்பு, கழிவுநீா் சுத்திகரிப்பு மற்றும் மறு சுழற்சி, துணிக்கழிவுகளை மறுசுழற்சி செய்து ஆடைகள் தயாரித்தல், மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படும் நெகிழி மற்றும் இதர அக்சஸரிஸ், குளங்களை தூா்வாரி பராமரித்தல், கல்வி, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, சமூக பங்களிப்பில் திருப்பூா் தொழில் சமூகத்தின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை எடுத்துரைத்தனா்.இந்த கண்காட்சியில் உலகின் 1,300 நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.