உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அறிவை வளர்க்க புத்தக வாசிப்பும் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் வேண்டும் தமிழருவி மணியன் பேச்சு

Published On 2022-07-19 05:17 GMT   |   Update On 2022-07-19 05:18 GMT
  • ஒன்றை பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல.
  • சிந்திக்க துவங்கியதால் தான் இறைவன் உருவெடுத்தார்.

திருப்பூர்:

ரவுத்திரம் வாசகர் வட்டம் சார்பில், வாழ்வே ஒரு மந்திரம் நூல் அறிமுக விழா திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்தது. இதில் இறைவன் இருப்பது எங்கே? எனும் தலைப்பில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் பேசிய தாவது:-

ஒன்றை பெறுவது மட்டுமே வாழ்க்கையல்ல. அவற்றை வேண்டுபவர் வேண்டுமென்ற நேரத்தில் திருப்பி தருவது தான் வாழ்க்கை. இரு கலைகளையும், நிலைகளையும் கொண்டது வாழ்க்கை. நாம் பிறந்தது முதல் பெற்றோரிடம் பெறுகிறோம். அவர்கள் வாழ கடைசியாக நம்மால் இயன்றதை தருகிறோம். தரவேண்டும். அதுவே அறம்.சாகும் வரை ஒருவர் பெற்றுக்கொண்டு மட்டுமே இருந்தால் அவர் வாழ்வதில் அர்த்தமில்லை. எண்ணம், செயலில் அவரவர் பாதையில் பயணிக்க வேண்டும். சாதி, மதம், இனத்தால் நம் பிரிந்து நிற்கிறோம். ஆனால்தமிழ் மொழியால் நாம் இணைந்திருக்கிறோம். அனைவரும் மனிதர் என்பதை உணர்ந்திருக்கிறோம். 700 கோடி மக்களை ஒன்றாக இணைப்பது மொழி.மதத்துக்கும், ஆன்மிகத்துக்கும் உள்ள வித்தியாசம் புரிந்து கொள்ள வேண்டும். மதம் மனிதனை பிரிக்கும். ஆன்மிகம் அரவணைக்கும். நம் அறிவை வளர்க்க, புத்தக வாசிப்பும், தெரிந்து கொள்ளும் ஆர்வமும் வேண்டும்.

உலகில் உள்ள அனைத்து உயிர்களிலும் நம்மை காண்பதும், நம்மில் காண்பதும் தான் ஆன்மிகம். ஆதி மனிதனுக்கு வியப்பும், அச்சமும் ஏற்பட்ட விடை காண முடியாத சில கேள்விகள் தோன்றின. அப்போது, நம்மை மீறியும் ஒரு சக்தி இருக்கிறது என்பதை அவனே எண்ணத்தோன்றினான். அதுவே வேதங்களாகவும், உபநிடதங்களாகவும் மாறி கடவுள் உருவாக அடித்தளமாக அமைந்தது. சிந்திக்க துவங்கியதால் தான் இறைவன் உருவெடுத்தார்.இவ்வாறு தமிழருவி மணியன் பேசினார்.

Tags:    

Similar News