விபத்துக்களை தடுக்க ஏ.பி.நகர் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படுமா?
- திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.
- வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
வீரபாண்டி:
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் நொச்சிபாளையம் செல்லும் சாலை ஏ.பி. நகர்., நொச்சிபாளையம், அவரப்பாளையம்,அல்லாளபுரம் ,உகாயனூர் வழியாக பொங்கலூர் செல்கிறது. இப்பகுதியில் பனியன் நிறுவனங்கள். தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் விபத்துகள் அதிகரித்து வருவதால் ஏபி நகர்,தெற்கு வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வு செய்ய செல்லும் இடம், .நொச்சிப்பாளையம் ஆகிய மூன்று இடங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க முன் வந்தனர். இதற்காக 3 இடங்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகின்றன. ஜல்லிக்கற்களும் இறுகி விட்டன. ஆனால் வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே இந்த 3 இடங்களிலும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.