பனியன் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய 3 வாலிபர்கள் கைது
- நேற்று முன்தினம் இரவு காளி குமாரசாமி கோவில் பின்புறம் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார்.
- வீரபாண்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்
திருப்பூர்:
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கிறிஸ்டின் ராஜ் (வயது 27). இவர் திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காளி குமாரசாமி கோவில் பின்புறம் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது 3 வாலிபர்கள் திடீரென்று அவரை வழிமறித்து பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அதில் ஒருவர் கத்தியை எடுத்து கிறிஸ்டின் ராஜன் கழுத்தில் காயப்படுத்தி விட்டு செல்போனை பறித்துக் கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து வீரபாண்டி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதாவிடம் கிறிஸ்டின் ராஜ் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திருப்பூர் பலவஞ்சிபாளையம் அடுக்குமாடி குடியிருப்போர் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (வயது 19), சூர்யா (19) மற்றும் கவுதம் (22) என்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிறிஸ்டின் ராஜை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதோடு கத்தியால் காயப்படுத்தி அங்கிருந்து தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வீரபாண்டி போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.