திருப்பூர் தொழில் துறையினரிடம் நூதன பணமோசடியில் ஈடுபடும் கும்பல்
- இடைத்தரகர்கள் மூலமே பெரும்பாலும் துணிகள் விற்பனை நடந்து வருகிறது.
- பல்லடம், அவிநாசி, ஈரோடு என பல்வேறு பகுதி போலீஸ் நிலையங்களிலும் மோசடி கும்பல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தமிழகத்தில் தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்து வரும் நகரத்தில்திருப்பூர், பல்லடம் முக்கிய பங்கு வகிக்கிறது. பல லட்சங்களில் முதலீடு செய்து உற்பத்தியை பெருக்கி ஏற்றுமதி வரை கொண்டு செல்ல தொழில்துறையினர் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.
சமீப காலமாக மோசடி செய்யும் கும்பல் ஒன்று, தொழில் துறையினரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி கொண்டு தலைமுறைவாகி வருவது அதிகரித்துள்ளது.
இது குறித்துதிருப்பூரை சேர்ந்த தொழில் துறையினர் சிலர் கூறியதாவது:-
இடைத்தரகர்கள் மூலமே பெரும்பாலும் துணிகள் விற்பனை நடந்து வருகிறது. அவ்வாறு லட்சக்கணக்கான மதிப்பிலான துணிகளை பெற்றுச்செல்லும் சில இடைத்தரகர்கள், பணத்துடன் கம்பி நீட்டுவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக ஈரோட்டைச் சேர்ந்த தந்தை மகன் என இருவர், இடைத்தரகர்களாக செயல்பட்டு பல கோடிகள் சுருட்டி மோசடி செய்துள்ளனர்.
கடந்த4ஆண்டுக்கு முன் பல்லடம், அவிநாசி வட்டார பகுதிகளில் 60க்கும் மேற்பட்டவர்களிடம், துணிகளை பெற்றுக்கொண்டு ரூ. 4.75 கோடி, ஈரோட்டை சேர்ந்தவரிடம், ரூ.3.75 கோடி , பல்லடத்தை சேர்ந்த இருவரிடம்ரூ.1.68 கோடி , அவிநாசியை சேர்ந்தவரிடம் 90 லட்சம் ரூபாய் என பல கோடிகள் மோசடி செய்துள்ளனர்.ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்கள், செல்போன் எண்கள் பயன்படுத்தி மோசடியை அரங்கேற்றி உள்ளனர். நம்பிக்கை காரணமாக துணிகளை கொடுத்து ஏமாறும் பலர் புகார் அளிக்க வருவதில்லை.இருப்பினும், பல்லடம், அவிநாசி, ஈரோடு என பல்வேறு பகுதி போலீஸ் நிலையங்களிலும் மோசடி கும்பல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசடி ஆசாமிகளால், தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் புகார் அளிக்கவும் வழியின்றி, எண்ணற்ற தொழில் துறையினர் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.