வீட்டிற்குள் புகுந்த டிராக்டர்- பெண் பலத்த காயம்
- பிரியா வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் தெற்கு வீதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் அருகில் வசித்து வருபவர் நந்தகுமார் ( 28). இவரது மனைவி பிரியா (வயது 27). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளான். கணவன், மனைவி இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று நந்தகுமார் வேலைக்கு சென்று விட்டார். பிரியா வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அந்த பகுதியில் வேகமாக சென்ற டிராக்டர் நந்தகுமாரின் வீட்டு சுவரில் மோதி, இரும்பு கதவை உடைத்து கொண்டு நிற்காமல் வீட்டுக்குள் புகுந்து பிரியா மீது ஏறியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி தகவல் அறிந்த நந்தகுமார், வீட்டிற்கு விரைந்து வந்து அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவியுடன் டிராக்டர் அடியில் சிக்கி தவித்த பிரியாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரியாவுக்கு வலது கால் முறிந்ததாக தெரிகிறது. இதற்கிடையே டிராக்டரை ஓட்டி வந்த காடையூரை சேர்ந்த பழனிச்சாமி என்பவருடைய மகன் லோகநாதனை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பிடித்து பெருமாநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், லோகநாதன் மது போதையில் டிராக்டர் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.