பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாமல் 13 கிராமமக்கள் தவிப்பு
- கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.
- இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.
உடுமலை:
குடிமங்கலம் அருகே பத்திரப்பதிவு மேற்கொள்ள முடியாமல் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-குடிமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட புதுப்பாளையம்,அடிவள்ளி உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட கிராமங்கள் கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலக வரம்பில் வருகிறது.இந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 75 ஆண்டுகளுக்கும் மேலாக கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வந்தனர்.இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராம குடியிருப்புகளில் காலி இடம்,வீடுகள் விற்பனை செய்யும்போது கோமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய மறுக்கின்றனர்.இதற்காக உரிய காரணமும் தெரிவிக்க மறுக்கின்றனர்.இதனால் இந்த கிராமங்களில் காலி இடங்களை வாங்கியவர்கள் பத்திரப் பதிவு செய்ய முடியாமலும்,இடத்தின் மீது கடன் வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.எனவே பத்திரப் பதிவுத்துறை உரிய விளக்கம் அளிக்கவும்,பிரச்சினைக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.