உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருப்பூர் வழியாக திருச்செந்தூர்-ராமேஸ்வரத்திற்கு ரெயில்கள் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

Published On 2022-11-17 07:18 GMT   |   Update On 2022-11-17 07:18 GMT
  • கார்த்திகை மாதம் என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாகும்.
  • ரெயில் செல்லும் வழித்தடங்களில், முக்கியமானதாக கிணத்துக்கடவு பகுதியும் அமைந்துள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்கி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வெளியூர் பயணங்களுக்கு அதிக அளவில் ெரயில் பயணத்தையே மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கி உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கார்த்திகை மாதம் என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாகும். இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் திருப்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி ெரயில் சேவை இல்லாததால் இரண்டு ெரயில்கள் மாறி மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது, இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பல ஆண்டுகளாக திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு ெரயில் சேவை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.ஆனால் தற்போது வரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு பண்டிகை காலங்களில் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கூட சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் இருந்து திருப்பூர் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதே போன்று கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உடுமலை-பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி - திண்டுக்கல் ெரயில்பாதை அகல ெரயில்பாதையாக மாற்றும் பணி கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி 2017ல் நிறைவடைந்தது.ஆனால் மீட்டர்கேஜ் காலத்தில் பொள்ளாச்சி வாயிலாக இயக்கப்பட்ட கோவை- ராமேஸ்வரம், கோவை- தூத்துக்குடி, கோவை-கொல்லம், கோவை - திண்டுக்கல் போன்ற ெரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன.

இந்த ெரயில்களை இயக்க வேண்டும் என, ரெயில்வே பயணிகள் நலச்சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உட்பட பலரும், அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித பலனும் இல்லை.கொரோனா பரவலுக்கு முன் காலை மற்றும் இரவு நேரங்களில், கோவை மாவட்ட பயணிகள் வசதிக்காக கோவை-பொள்ளாச்சி மற்றும் பொள்ளாச்சி - கோவை ெரயில்கள் இயக்கப்பட்டன. அவை இப்போது இயக்கப்படுவதில்லை.

இதனுடன் கோவை, பொள்ளாச்சி வழியாக டெல்டா மாவட்டங்களை இணைக்கும் மேட்டுப்பாளையம் - தாம்பரம், தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட திருநெல்வேலி, டானாபூர், வாரம் ஒரு முறை இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ெரயில்களை, தினசரி ெரயில்களாக இயக்க வேண்டும்.

பாலக்காடு - திருநெல்வேலி செல்லும் பாலருவி விரைவு ெரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், வேலை நிமித்தமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - கோவை மெமூ ெரயிலையும், பொள்ளாச்சி வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

இவற்றுடன் திருவனந்தபுரம் - மதுரை வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு ெரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும், பொள்ளாச்சி வழியாக கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ெரயிலை இயக்கவும், ெரயில்வே வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. அந்த பணிகள் கூட இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.

அதேபோல், அமிர்தா ரெயிலின் மூன்று படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை, கொரோனாவுக்கு முன்பிருந்ததை போலவே அமரும் வசதி கொண்ட பெட்டிகளாக மாற்றி இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு உடுமலை, பொள்ளாச்சி பகுதி மக்களின் ரெயில்வே சேவை குறித்த கோரிக்கைகள் ஏராளமாக உள்ள நிலையில் அதை பாலக்காடு கோட்ட நிர்வாகமும், தெற்கு ெரயில்வேயும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன.தெற்கு ெரயில்வே நிர்வாகம், இந்த கோரிக்கைகளில் கவனம் செலுத்தி பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகல ெரயில்பாதையாகவும், மின்மயமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ள உடுமலை, பொள்ளாச்சி ெரயில் வழித்தடத்தில், மக்கள் எதிர்பார்க்கும் ெரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ெரயில்வே ஆர்வலர்கள் பிரதமருக்கு மனுவாக அனுப்பியுள்ளனர்.

இது குறித்து ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கோவை - பொள்ளாச்சி ரெயில் காலை, 5:45 மணிக்கு கோவையில் புறப்பட்டு, பொள்ளாச்சி வரும். அதேபோல் இரவு 8:30 மணிக்கு பொள்ளாச்சியில் புறப்பட்டு கோவை செல்லும். இதனால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் பகுதி பயணிகளுக்கு செம்மொழி, ஆலப்புழா மற்றும் நீலகிரி ஆகிய விரைவு ெரயில்களை பிடிக்கவும், பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலை பிடிக்கவும், இணைப்பு ெரயிலாக இருந்தது.அதேபோல் பொள்ளாச்சி - கோவை ெரயில், சென்னை, நீலகிரி, சேரன், பெங்களூரு, யஷ்வந்த்பூர் ஆகிய ெரயில்களுக்கு இணைப்பு ெரயிலாக இருந்தது.கொரோனா பரவலின்போது இந்த இரண்டு ெரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, இந்த ெரயில்களை மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து, திருநெல்வேலி வரை வாராந்திர விரைவு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில், வெள்ளிக்கிழமைகளில் இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

ெரயில் செல்லும் வழித்தடங்களில், முக்கியமானதாக கிணத்துக்கடவு பகுதியும் அமைந்துள்ளது. ஆனால், கிணத்துக்கடவில் இந்த ெரயில் நிற்காததால், இப்பகுதி மக்கள் பொள்ளாச்சி அல்லது போத்தனூர் சென்று, இந்த ெரயிலில் பயணிக்க வேண்டியுள்ளது.தெற்கு ரயில்வே நிர்வாகம், திருநெல்வேலி ெரயிலை கிணத்துக்கடவில் நிறுத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News