தென்மேற்கு பருவமழை - முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.
- அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முன்னேற்பாடுகளை துவக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
உடுமலை:
கேரளாவில்தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டங்களில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பருவமழை தீவிரமடையும்போது, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும்.வருவாய்த்துறை, போலீசார், தீயணைப்புத்துறையினர் மற்றும் தன்னார்வலர் அடங்கிய தாலுகா அளவிலான மீட்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மழை சேதம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் விரைந்து மீட்பு பணியை துவக்க வேண்டும்.மழைப்பொழிவு, மழை சேதம் விவரங்களை தினமும் பெற்று சேதங்களுக்கு, நிவாரணம் வழங்கப்பட வேண்டும். பேரிடர் தடுப்பு பணிகளுக்கு 1077 என்ற கட்டணமில்லா எண்ணை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து திருப்பூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தாலுகா அலுவலகங்களில் 24 மணி நேரமும், கண்காணிப்பு பணி நடக்கும் வகையில், சுழற்சி முறையில் பணி நேரம் மாற்றி அமைக்கப்படும்.தமிழக அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி, தாலுகாவுக்கு ஒரு துணை கலெக்டர் நிலை அதிகாரிகள் தலைமையில் பேரிடர் மேலாண்மை குழு அமைத்து கண்காணிக்கப்படும். விரைவில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து முன்னேற்பாடுகளை துவக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்றனர்.