உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

பொழுதுபோக்கு அம்சங்களுடன் நொய்யல் கரையை மேம்படுத்த திட்டம்

Published On 2023-11-17 10:50 GMT   |   Update On 2023-11-17 10:50 GMT
  • 13.5 கி.மீ., நீளத்துக்கு துணை கால்வாய் மற்றும் ஆற்றுக்குள் கட்டுமானம் (பண்ட் லைனிங்) ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
  • சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் ஏற்படுத்த வேண்டியுள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருப்பூர் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் கரை மேம்பாடு செய்யும் திட்டம் 160 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணைமேடு பகுதியில் இருந்து மணியகாரம்பாளையம் பாலம் வரையிலான 6.5 கி.மீ., தூரத்துக்கு ஆற்றின் இரு கரைகளிலும் தார் ரோடு அமைக்கப்படுகிறது. இது தவிர கரையை பலப்படுத்தும் விதமாக கான்கிரீட் சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. நொய்யலில் வந்து சேரும் கழிவு நீர் கால்வாய்கள், துணை கால்வாய் (பேபி கால்வாய்) மூலம் ஆங்காங்கே சேகரம் செய்து, பம்பிங் செய்யப்பட்டு, சுத்திகரிப்பு செய்து ஆற்றில் விடும் வகையில் திட்ட மிடப்பட்டுள்ளது. 6 இடங்களில் இம்மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக 13.5 கி.மீ., நீளத்துக்கு துணை கால்வாய் மற்றும் ஆற்றுக்குள் கட்டுமானம் (பண்ட் லைனிங்) ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் 20 சிறு பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் ஏற்கனவே கரையோரம் பொழுதுபோக்கு அம்சங்கள் அமைக்கும் வகையில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இருப்பினும் தார் ரோடு முன்னர் திட்டமிட்ட அகலம் 7 மீட்டர் தற்போது 10 மற்றும் 14 மீ., என மாற்றப்பட்டுள்ளது. அவ்வகையில் பொழுதுபோக்கு அம்சத்துக்கான நிதியாதாரம் தார் ரோடு பணிக்கு மாற்றப்பட்டு விட்டது.இருப்பினும் நொய்யல் கரையில் மரங்கள் நட்டு பராமரித்தல், பூங்கா அமைத்தல், நடைப் பயிற்சி மேடை, வாகன பார்க்கிங், கேண்டீன் உள்ளிட்ட சிறு கடைகள், அலங்கார விளக்குகள், ஓய்வு எடுக்க இருக்கை வசதிகள், ஆங்காங்கே நிழல் தரும் அலங்கார குடைகள்,

சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், ஆம்பி தியேட்டர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது. நொய்யல் ஆற்றின் கரையை மேம்படுத்தி திருப்பூர் மக்களின் சிறந்து பொழுது போக்கு இடமாக இதை மாற்ற வேண்டும் என்ற திட்டம் உள்ளது. தனியார் நிறுவனம் மூலம் இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை பெறப்பட்டுள்ளது. கரையை மேம்படுத்தி அழகுபடுத்தும் விதமாக பகுதி வாரியாக மாதிரி வடிவங்கள் சிறப்பான முறையில் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் தனியார் அமைப்புகள், தொழில் துறையினர் உள்ளிட்டோர் பங்களிப்பை வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மேலும் ஒரு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் இத்திட்டம் செயல்படுத்துவதற்கான இறுதி வடிவம் முடிவாகும்.இத்திட்டம் முழுமை பெறும் நிலையில், நொய்யல் கரை மேம்படுத்தும் மாநகராட்சி மக்களின் கனவு மிக விரைவில் நிறைவேறும். இந்த இடம் மாநகரில் மட்டுமின்றி மக்கள் மனதிலும் முக்கிய இடத்தை பெறும் என்பது உறுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News