அரசுப்பள்ளி மாணவர்களின் சுயவிபரங்களை 'எமிஸ்' இணையதளத்தில்பதிவேற்றம் செய்ய உத்தரவு
- மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் குறித்த விபரங்கள், பள்ளியின் கட்டமைப்பு குறித்த அனைத்து தகவல்களும் அவ்வப்போது பதிவேற்றப்படும்.
- விஜயதசமி அட்மிஷன் தொடக்க வகுப்புகளுக்கு நடத்தியதால், மீண்டும் மாணவர் விபரங்களை அப்டேட் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களின் விபரங்களை தொகுக்கும் வகையில், பள்ளிக்கல்வி மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளம் கொண்டுவரப்பட்டது. இதில், அரசுப்பள்ளிகளை பொறுத்தவரை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் குறித்த விபரங்கள், பள்ளியின் கட்டமைப்பு குறித்த அனைத்து தகவல்களும் அவ்வப்போது பதிவேற்றப்படும். எமிஸ் புள்ளி விபர அடிப்படையில் தான் ஆசிரியர் காலியிடம் கணக்கிடுதல், மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் கொள்முதல் செய்வது, புதிய பணியிடங்கள் தோற்றுவித்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
வழக்கமாக கல்வியாண்டு தொடங்கும் போது ஆகஸ்டு மாதம் இறுதி வரை அட்மிஷன் நடப்பதால், அவ்வப்போது புதிதாக சேரும் மாணவர் விபரங்கள் உள்ளீடு செய்யப்படும். தற்போது விஜயதசமி அட்மிஷன் தொடக்க வகுப்புகளுக்கு நடத்தியதால், மீண்டும் மாணவர் விபரங்களை அப்டேட் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவரின் சுயவிபரங்கள் அனைத்தும், சரியாக இருப்பதை உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், எமிஸ் இணையதளத்தில் சர்வர் குளறுபடியால், உள்ளீடு செய்யப்படும் தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளது.மாதந்தோறும் இப்பணிகள் மேற்கொள்வதால், கற்பித்தலில் ஈடுபட முடியாத சூழல் நீடிக்கிறது. தொழில்நுட்ப குளறுபடிகளை சரிசெய்துவிட்டு, அப்டேட் பணிகள் மேற்கொண்டால் மட்டுமே இச்சிக்கலுக்கு தீர்வு காண முடியும் என்றனர்.