அடுக்குமாடி குடியிருப்பு பயனாளிகளுக்கு அதிகாரி எச்சரிக்கை
- அவிநாசி சோலை நகரில் 448 வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
- குடிநீர் வினியோகிக்க பேரூராட்சிக்கு வாரியம் சார்பில் 40 லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது.
அவிநாசி :
நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் அவிநாசி சோலை நகரில் 448 வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 173 வீடுகள் பூட்டியிருப்பதாகவும், பலரும் வாடகைக்கு விட்டு வெளியில் தங்கியிருப்பதாகவும் புகார்கள் வந்தன.
இதையடுத்து வாழ்வாதார மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சரவணபிரபு, குடியிருப்புவாசிகளுக்கு அறிவுரை, ஆலோசனை வழங்கி கூறியதாவது:- நம் குடியிருப்பு, நம் பொறுப்பு என்ற திட்டத்தில், குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஏற்படுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். குடியிருப்புகளை சுத்தம், சுகாதாரமாக பராமரிப்பது, குடிநீர் திறந்து விடும் பணி மேற்கொள்வதற்கு பணியாட்களை நியமிப்பது, அவர்களுக்கு சம்பளம் வழங்குவது, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துவது, சுற்றுச்சுவர் எழுப்புவது, 'சிசிடிவி' கேமரா பொருத்துவது உள்ளிட்ட பணிகளை, குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வொரு குடியிருப்புவாசிகளிடம் இருந்தும் மாதம் 250 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.
இந்த வீடுகள் யார் பெயரிலும் பதிவு செய்யப் படவில்லை. மாறாக 10 ஆண்டுகள் அதில் குடியிருந்த பிறகு வீடுகளை விற்றுக் கொள்ள விற்பனை சான்றிதழ் வழங்கப்படும். குடியிருப்போர் நலச்சங்கத்துக்கு சந்தா வழங்காமல் சங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது வீடுகளை வாடகை, போக்கியத்துக்கு விட்டு வெளியில் வசிப்பது, டம்மி பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு, பிறருக்கு வீடுகளை விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும்.
அடுத்த மாதம் வாரியத்தின் எஸ்டேட் அலுவலர், வீடு தோறும் ஆய்வு மேற்கொண்டு உறுதிபடுத்திய பின் இந்நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு பின், வீடுகளை விற்க விற்பனை சான்றிதழ் பெற வேண்டுமானால் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும்.
குடிநீர் வினியோகிக்க பேரூராட்சிக்கு வாரியம் சார்பில் 40 லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தடையின்றி கிடைப்பதால், பலர் தண்ணீரை விரயமாக்குகின்றனர்.அனாவசியமாக செலவழிக்கின்றனர். எனவே காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்வெல் தண்ணீர் தடையின்றி வினியோகிக்கப்படும் என்றார்.