ஆடி அமாவாசையையொட்டி அமராவதி ஆற்றில் பக்தர்கள் குவிந்தனர்
- ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம்.
- முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.
தாராபுரம்:
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை அமராவதி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை ஆற்றில் கரைத்து வழிபாடு செய்தனர். ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம். அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது.
தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மை பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.
கருட புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும் என புரோகிதர்கள் தெரிவித்தனர்.
தாராபுரம் அமராவதி ஆற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருந்ததால் சில இடங்களில் தேங்கி நின்ற தண்ணீரில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேப்போல் உடுமலை அமராவதி ஆற்றங்கரை மற்றும் திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில் பக்தர்கள் புனிதநீராடினர்.