தைப்பூச விழாவையொட்டி விநாயகருக்கு வெள்ளைப்பூண்டு ரசம் படைத்து வழிபாடு - பெண்கள்-குழந்தைகள் கும்மியடித்து கோலாகலம்
- தைப்பூச விழா நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது.
- உணவு வகைகளை ஒருவொருக்கொருவர் பறிமாறி நிலாச்சோறு உண்டு வந்தனர்.
திருப்பூர் :
அனுப்பர்பாளையம் கே.பி.எஸ். காலனியில் தைப்பூச விழாவையொட்டி விநாயகருக்கு வெள்ளைப்பூ ண்டு ரசம் படைத்து வழிபாடு செய்த பெண்கள்-குழந்தைகள் கும்மியடித்தது கோலாகலமாக இருந்தது.
தைப்பூச விழா நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. தைப்பூச விழாவையொட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் கே.பி.எஸ். காலனியில் உள்ள விநாயகர் கோவிலில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் கடந்த 1 வாரமாக தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். மேலும் தினமும் வீடுகளில் இருந்து பல்வேறு உணவு வகைகளை விநாயகர் கோவிலுக்கு கொண்டு வந்து சாமி முன்பு படைத்து, பாட்டு பாடி கும்மியடித்து, பின்னர் அங்கேயே அனைவரும் கொண்டு வந்த உணவு வகைகளை ஒருவொருக்கொருவர் பறிமாறி நிலாச்சோறு உண்டு வந்தனர். நேற்று முன்தினம் தைப்பூச விழாவையொட்டி விநாயகருக்கு மாவு, பழம் உள்ளிட்டவற்றை படைத்து வழிபட்டனர். இந்த நிலையில் நேற்று மாவு, பழம் சாப்பிட்ட விநாயகருக்கு செமிக்கும் வகையில் வெள்ளைப்பூண்டு ரசமும், சாதமும் படைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு விநாயகருக்கு படைக்கப்பட்ட உணவு வகைகள் முன்பு கும்மி யடித்து, விநாயகரை வழிபட்டனர். முடிவில் அனைவரும் வெள்ளைப்பூண்டு ரசத்துடன் நிலாச்சோறு உண்டனர். இன்று (செவ்வாய்கிழமையுடன்) தைப்பூச விழா நிறைவடை கிறது.