பொங்கல் பரிசு தொகுப்பு பெற ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்கும் உத்தரவு வரவில்லை - கூட்டுறவு இணைப்பதிவாளர் விளக்கம்
- பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- பொங்கல் பரிசு தொகுப்பு பெற ‘ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் இதுவரை நமக்கு வரவில்லை.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலமாக 1,129 ரேஷன் கடைகள், மகளிர் குழுக்கள் மூலமாக 14 ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் 22 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,129 ரேஷன் கடைகள் உள்ளன. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது என்றும், இதற்காக ரேஷன் கார்டுதாரர்களின் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு வங்கி கணக்கு இணைக்கப்பட உள்ளதாகவும் திருப்பூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இவ்வாறு வங்கிக்கணக்கு இணைக்காமல் உள்ள கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளுக்கு சென்று கார்டில் உள்ள யாராவது ஒருவரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறுஞ்செய்தியில் வேகமாக தகவல் பரவியது. அதுவும் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, பொங்கல் பரிசு தொகுப்பு பெற 'ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் இதுவரை நமக்கு வரவில்லை. அது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்–றார்.