தாராபுரத்தில் பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்றம்
- நவீன உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் தான் உள்ளது.
- பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும்.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அரங்கேற்ற விழாவில், பவளக்கொடி கும்மியாட்டம் ஆடி பெண்கள், குழந்தைகள் அசத்தினர். இந்த பவளக்கொடி கும்மியாட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட வள்ளி கும்மி ஆட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். மேலும், நூத்தி நாற்பதாவது மேடை நிகழ்வாக 41 வது அரங்கேற்ற நிகழ்ச்சியாக இந்த கும்மியாட்டம் நடைபெற்றது.
பவளக்கொடி கும்மியாட்டத்தில்7 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் பங்கு பெற்று, ஒலிக்கும் இசைக்கு ஏற்றவாறு தங்களது நடனத்தை ஒன்றாக வெளிப்படுத்தி ஆடினர். இந்த நடனம் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும் விதமாக அமைந்து இருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
மேலும் இந்த கும்மி ஆட்டத்தில் ஆடிய அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்காகவும், பாரம்பரிய கலையை மீட்டெடுப்பதற்காகவும் ஆடினர். இது மட்டுமல்லாமல் 7 வயது முதல் 20 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் ஆர்வமுடன் இந்த பவளக்கொடி கும்மியாட்ட கலையை கற்று வருகின்றனர். இந்த கலை மென்மேலும் வளர்ந்தால் தான் நன்றாக இருக்கும் என பவளக்கொடி கும்மியாட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நவீன உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் தான் உள்ளது. அவ்வாறு அழிந்தால் அந்த கலையின் பெருமை, அதன் மரபு ஆகியவை அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமலேயே போகும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு, பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என கும்மியாட்ட குழுவினர்களால் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பல்லடம் அடுத்த, செம்மிபாளையம் ஊராட்சி கே.என்.புரம் கிராமத்தில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காவடி மற்றும் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி புதுக்காலனி விநாயகர் கோவில் திடலில் நடந்தது. குழந்தை வடிவேலன் கலைக்குழு சார்பில் நடந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை ஊராட்சி தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
முன்னதாக முருகப்பெருமானை வணங்கிய பின் கலை நிகழ்ச்சி துவங்கியது. சிறுவர், சிறுமியரின் காவடி கரகாட்டமும், இதையடுத்து, குழந்தை வடிவேலன் கலைக்குழுவினரின் கும்மி ஆட்டம் மற்றும் காவடி ஆட்டம் நடந்தது.சிறுவர்கள், இளம் பெண்கள் மற்றும் தாய்மார்கள் உள்ளிட்டோர் கும்மியாட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.