கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிந்தால் அபராதம் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
- சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளினால் விபத்துகள் ஏற்படுவதாகவும் புகாா் அளித்தனா்.
- கால்நடைகள் பறிமுதல் செய்து விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.
வெள்ளக்கோவில்
வெள்ளக்கோவில் பகுதியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரனிடம் புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து, அவா் கள ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அவா் நிருபர்களிடம் கூறியதாவது:- வெள்ளக்கோவில் பகுதி சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிய கூடாது. உப்புப்பாளையம் மேற்கு, மு. பழனிசாமி நகா், காமராஜபுரம், சீரங்கராய க்கவுண்டன்வலசு, இந்திரா நகா், கச்சேரிவலசு, அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் மாடுகள், வெள்ளாடுகள், நாய்கள் சுற்றித் திரிகின்றன.
கால்நடைகளால் பெரும் விபத்து ஏற்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ள நிலையில் இனி சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் பொது சுகாதார சட்டம் 1939 ன்படி அபராதம் விதிக்கப்படுவதுடன், கால்நடைகள் பறிமுதல் செய்து விலங்குகள் நல வாரியத்திடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.