பல்லடம் செட்டிபாளையம் சாலையில் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் மனு
- அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.
- மதுபான கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
பல்லடம்:
பல்லடம்- செட்டிபாளையம் ரோடு பிரிவில் அரசு மதுபான கடை எண் 1830 செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதால், அந்தக் கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பல்லடம் தாசில்தார் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாக கூறி மதுபான கடையை மூட உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மதுபான கடையை அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி அதே பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் அமைக்க, இடம் ஆய்வு செய்யப்பட்டது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்று பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில், அந்தப் பகுதியில் மீண்டும் மதுபான கடை அமைக்க கூடாது. அதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.