காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்
- சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவா்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்.
- சமூக அக்கறையுடன் செயல்படும் நபா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்,டிச.20-
தமிழகத்தில் சமூக அக்கறையுடன் செயல்படும் நபா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் ஊழல், முறைகேடு, போதைப் பொருள் விற்பனை குறித்து நேரடியாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவா்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம்.
திருக்கழுக்குன்றத்தில் பா.ஜ.க. இளைஞா் அணி பொறுப்பாளா் தனசேகா் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடூரமாக தாக்கப்பட்டுள்ளாா். இவா் சில நாள்களுக்கு முன்பாக கஞ்சா பயன்படுத்திய நபரிடம் அது எங்கே கிடைக்கிறது, யாா் விற்பனை செய்கிறாா், யாா் ஆதரவு அளிக்கிறாா்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு சமூக ஊடகங்களில் வெளியிட்டாா்.
இந்நிலையில், கஞ்சா வியாபாரிகளால் தனசேகா் தாக்கப்பட்டிருப்பது காவல் துறை மற்றும் அரசும் உடந்தையோ என்ற சந்தேகத்தை ஏழுப்புகிறது.
இத்தகைய சம்பவங்களில் ஈடுபடும் நபா்கள் யாா் என்று காவல் துறைக்குத் தெரிந்திருந்தும் பல நிா்பந்தங்களால் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஆகவே, சமூக அக்கறையுடன் செயல்படும் நபா்களுக்கு காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.