உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கால்வாயில் குப்பை - கோழிக்கழிவு கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு

Published On 2023-08-31 07:57 GMT   |   Update On 2023-08-31 07:57 GMT
  • இறந்த கோழிகளை கால்வாயில் வீசியெறியாமல் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைக்க வேண்டும்.
  • சரியான முறையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

திருப்பூர்:

பி.ஏ.பி., கால்வாயில் குப்பை, கழிவுகள் மற்றும் இறந்த கோழிகள் வீசப்படுவதால் கால்வாயில் வரும் தண்ணீரை விவசாய நிலங்களுக்கு பயன்படுத்துவதில் பெரும் சங்கடத்தை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மேற்பார்வையில் கால்வாய் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கால்வாய் மாசு தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் வழங்கிய அறிக்கை அடிப்படையில் ஆய்வின் முடிவில் எடுக்கப்பட்ட முடிவு வருமாறு:-

கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க, நமக்கு நாமே திட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் வேலி அமைத்து தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இதற்காகும் செலவினத்தில் 3ல் ஒரு பகுதியை வழங்க விவசாயிகள் ஒப்புக்கொண்டனர்.

பொங்கலூர் பகுதியில் உள்ள கால்வாயில் பயன்பாடற்ற ஜீப் சாலை வழியாக கோழிக்கழிவுகள் கொண்டு வரப்பட்டு கால்வாயில் கொட்டப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால் அச்சாலையை மூட பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்வாய் அருகில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்கள் இறந்த கோழிகளை கால்வாயில் வீசியெறியாமல் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைக்க வேண்டும். இதை உள்ளாட்சி நிர்வாகத்தினர், கால்நடைத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும்.

அதிக அளவு குப்பை, கழிவு கொட்டப்படும் இடத்தையொட்டி வசிக்கும் குடியிருப்புவாசிகள், கோழிப்பண்ணை, ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து, உள்ளாட்சி நிர்வாகத்தினர், கால்நடை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினர் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும். கால்வாயில் குப்பை மற்றும் கோழிக்கழிவு கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். அபராத தொகை குறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பிற உள்ளாட்சி நிர்வாகத்தினர் முடிவெடுத்து அறிவிப்பு செய்ய வேண்டும்.

இவையெல்லாம், சரியான முறையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே விவசாயிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.  

Tags:    

Similar News