நொய்யல் ஆற்றங்கரையில் நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு
- கொங்கு சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும்.
- அணை நடுவிலுள்ள நல்லம்மன் கோவில் முழுமையாக மூழ்கி இருக்கிறது.
திருப்பூர் :
திருப்பூரை அடுத்த மங்கலம் அருகில் நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை கொங்கு சோழர்கள் காலத்தில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். இந்த அணை கட்டும் போது, அணை நடுவில் உடைந்து கொண்டே இருந்த காரணத்தால் உடையும் பகுதியில் நல்லம்மன் என்ற சிறுமி உயிர் தியாகம் செய்ததை அடுத்து அந்த அணை கட்டப்பட்டு வலுவாக இருப்பதாகவும், இதனால் நல்லம்மனுக்கு வழித்தோன்றல்கள் ஆண்டுக்கு ஒரு முறை பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் இன்று நொய்யல் ஆற்றில் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அணை நடுவிலுள்ள நல்லம்மன் கோவில் முழுமையாக மூழ்கி இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் விழாவை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கோவில் விழா குழுவினர் ஆற்றங்கரையில் பொங்கல் வழிபாடு நடத்த முடிவு செய்தனர். நல்லம்மன் தடுப்பணைக்கு அருகில் செல்ல முடியாத நிலையில் வெள்ளம் தடுத்தபோதும் ஆற்றங்கரையில் பச்சை குடிசை அமைத்து நல்லம்மனுக்கு பொங்கல் வைத்து படையல் வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.