உள்ளூர் செய்திகள்

செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமையில் கூட்டம் நடைபெற்ற காட்சி. 

பொதுமக்களின் மனுக்கள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

Published On 2022-08-24 10:27 GMT   |   Update On 2022-08-24 10:27 GMT
  • அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கொடுவாயில் நடைபெற்றது.
  • தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

குண்டடம் :

திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீதான அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் கொடுவாயில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மகளிா் சுகாதார வளாகம், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், வீட்டுமனைப் பட்டா, கால்நடை மருத்துவமனை, குடிநீா் வசதி, கோயில் புனரமைப்பு பணிகள், சமுதாயக் கூடம், பொதுக்கழிப்பிடம் கட்டுதல் உள்ளிட்ட அனைத்து வளா்ச்சிப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் கொடுமுடியை நீராதாரமாக கொண்டு முத்தூா், காங்கயம் வழியாக மேட்டுக்கடை வரையிலும் கொண்டு வர முடிகிறது. வெள்ளக்கோவில், மூலனூா், கொளத்துப்பாளையம், தாராபுரம் நகராட்சி மற்றும் சின்னக்காம்பாளையம் பேரூராட்சி வரையிலும் பெரிய திட்டமாக அப்போதைய முதல்வா் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த காலத்தில் சரியாக பராமரிப்பு பணி நடைபெறாத காரணத்தினால் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகவே, குடிநீா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்யும் வகையில் ஆங்காங்கு ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீா் எடுப்பதற்கும், மின்மோட்டாா் மற்றும் பழுதான குழாய்களை மாற்றி சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறோம். பெறப்படும் மனுக்களின் மீது அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மதுமதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, குண்டடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் யூனியன் கவுன்சிலருமான சந்திரசேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலர் சிவசெந்தில்குமார், குண்டடம்-ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு, யூனியன் கவுன்சிலர் புங்கந்துறை சண்முகபிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News