பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடைவிதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- அமைப்பின் நிர்வாகிகள் இல்லங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை செய்தனர்.
- 250க்கும் மேற்பட்ட அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் :
நாடு முழுவதும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் இல்லங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 250க்கும் மேற்பட்ட அந்த அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஒன்றிய அரசு ஐந்தாண்டு கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்ததை கண்டித்தும் உடனடியாக அந்த தடையை ரத்து செய்ய கோரி திருப்பூர் ரயில் நிலையம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 30 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரையும் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் காங்கேயம் ரோடு சி.டி.சி கார்னர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் அங்கு பாதுகாப்பு நின்ற போலீசார் கைது செய்தனர்.