கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு - கருப்பு கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்
- பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 105 அடியாகும்.
- கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
காங்கயம் :
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 105 அடியாகும். பவானிசாகர் அணையில் இருந்து கடைமடை பகுதியான கரூர் மாவட்டம் அஞ்சூர் கிராம ஊராட்சி வரை உள்ளகீழ்பவானி பாசன கால்வாயில் ரூ.900 கோடி மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் கான்கிரீட் தளம் அமைத்தால் கால்வாயின் இருபுறமும் உள்ள லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு, பறவைகள் அழிந்து விடும். விவசாய பணிகளில் தொய்வு ஏற்படும்.
எனவே கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தின் அரசாணை எண் 276-ஐ உடனடியாக ரத்து செய்ய கோரியும், கால்வாயை முழுமையாக தூர்வாரி பராமரிக்க வேண்டும் என்றும் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பெருந்துறை அருகே வாய்க்கால் மேடு பகுதியில் கடந்த 5 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், கீழ்பவானி கால்வாய் கான்கிரீட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கீழ்பவானி பாசன கடைமடை பகுதியான முத்தூர் - மங்கலப்பட்டி, பூமாண்டன்வலசு கிராமங்களில் விவசாயிகள் பொது இடங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஏராளமான விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் பெருந்துறை பகுதிக்கு புறப்பட்டு சென்றனர்.