உள்ளூர் செய்திகள் (District)

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு - கண்களில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் போராட்டம்

Published On 2023-02-24 11:58 GMT   |   Update On 2023-02-24 11:58 GMT
  • பொதுமக்கள் பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து பொதுமக்களை தடுத்தனர்.
  • 80 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பல்லடம் :

பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையம் மயான பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.145 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்க பல்லடம் நகராட்சி தரப்பில் பூமிபூஜை நடைபெற்றது. ஏற்கனவே நவீன எரிவாயு தகன மேடை அமைக்க அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில் எரிவாயு தகன மேடை அமைக்க பூமி பூஜை நடத்துவதை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் திரண்டனர்.

இதையடுத்து அந்தப்பகுதியில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு, பொதுமக்கள் பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு செல்லாதவாறு தடுப்புகள் அமைத்து பொதுமக்களை தடுத்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்ற போது அவர்களை போலீசார் எச்சரித்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே பூமி பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே சமூக வலைத்தளத்தில் எரிவாயு தகன மேடை திட்டம் வெற்றி அடைந்ததாக கருத்துக்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பச்சாபாளையம் பகுதி மக்கள், ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் பல்லடம், கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலை நால்ரோடு பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்லடம் நகரமே ஸ்தம்பித்தது. சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் உள்பட 80 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.பின்னர் இரவு 8 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News