உள்ளூர் செய்திகள் (District)

மணிமுத்தாறு அருவியில் திரண்ட சுற்றுலாப் பயணிகள்

Published On 2024-09-22 09:35 GMT   |   Update On 2024-09-22 09:35 GMT
  • சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
  • பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி பகுதியில் எப்போதும் தண்ணீர் விழும். இதில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்வார்கள்.

இந்நிலையில் இங்கு சூழல் சுற்றுலா வரும் பொதுமக்கள் வசதிக்காக அருவிப்பகுதியில் பெண்கள் உடைமாற்றும் அறை, பொது கழிப்பறைகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கியது.

இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அருவிப்பகுதி யில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அந்த பணிகள் நேற்றுடன் முடி வடைந்தது.

இதைத்தொடர்ந்து இன்று முதல் சூழல் சுற்றுலாவிற்காக பொதுமக்கள் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல வழக்கமான நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும் என்று களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்ககம் இளையராஜா அறிவித்தார்.

அதன்படி மணிமுத்தாறு அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடைக்காலம் போல வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் திரண்ட வண்ணம் இருந்தனர்.

இன்று விடுமுறை நாளாகவும் அமைந்ததால் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News