பல்லடம் அருகே இரும்பு உருக்காலைக்கு எதிராக போராட்டம் - அரசியல் கட்சியினர் ஆதரவு
- 17 ம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த17 ம் தேதி முதல் கடந்த 10 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் வி.எம். சண்முகம் தலைமையில்,பல்லடம் ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர் செல்வராஜ், வீரபாண்டி பகுதி செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் இது குறித்து ஓ.பி.எஸ்.சிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தனர்.இதே போல பா.ஜ.க.திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல், விவசாய அணி மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் காத்திருப்புப் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்தனர். இரும்பு உருக்காலை அனுமதியின்றி இயங்கிய விவகாரத்தில் துணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்தனர்.