உள்ளூர் செய்திகள்

மனு கொடுக்க வந்த பொதுமக்கள். 

அடிப்படை வசதிகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் - வஞ்சியம்மன் நகர் பொதுமக்கள் அறிவிப்பு

Published On 2022-09-30 08:56 GMT   |   Update On 2022-09-30 08:56 GMT
  • குடிசை மாற்று வாரியம் சார்பாக 30 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு குடி அமர்த்தி வைத்தனர்.
  • அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக உறுதியளித்திருந்தனர்.

வீரபாண்டி :

திருப்பூர் காசிபாளையம் ஆற்றங்கரையோரம் வசித்து வந்த பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பாக முதலிபாளையம் பிரிவு வஞ்சியம்மன் நகர் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு குடி அமர்த்தி வைத்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக அங்கு குடிநீர், மின்சாரம், சாக்கடை கால்வாய் வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் நேற்று திருப்பூர் நல்லூர் 3 மண்டல அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது ;-

திருப்பூர் காசிபாளையம் ஆற்றங்கரையோரம் இருந்த 30 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பாக முதலிபாளையம் பிரிவு வஞ்சியம்மன் நகர் பகுதியில் குடியிருப்பதற்காக இடம் கொடுத்தனர். அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் தற்போது வரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. மின்சாரம் இல்லாததால் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் படிக்க முடிவதில்லை இரவு நேரங்களில் பாம்பு தொல்லை அதிகரித்துள்ளது. பள்ளி மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்காக 3 கிலோமீட்டர் சென்று வர வேண்டி உள்ளது. குடிநீர் வசதி இதுவரை செய்து தரவில்லை. இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பிரச்சினையை பலமுறை தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மண்டல அதிகாரியிடமும், மண்டல தலைவரிடமும் தெரிவித்தும் எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஊர் மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலிலும், பெரும் போராட்டங்களிலும் ஈடுபடுவோம் என்றனர்.

Tags:    

Similar News