திருப்பூர் புஷ்பா சந்திப்பு பகுதியில் சாலையை கடக்கும் பொதுமக்கள் நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டுகோள்
- போக்குவரத்து கடும் நெருக்கடியுடனும் ரோடுகள் நெரிசலுடன் காணப்படுவது சகஜமாக உள்ளது.
- போக்குவரத்து நெரிசல் தீர்வு காணப்படாமல் தினமும் பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.
திருப்பூர் :
திருப்பூர் நகரப்பகுதியில் பல்வேறு முக்கியமான ரோடுகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இதனால் போக்குவரத்து கடும் நெருக்கடியுடனும் ரோடுகள் நெரிசலுடன் காணப்படுவது சகஜமாக உள்ளது. குறிப்பாக புஷ்பா சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் உள்ள நிலையிலும் பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தீர்வு காணப்படாமல் தினமும் பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.
இதனால் போக்குவரத்து துணை மற்றும் உதவி கமிஷனர்கள், வடக்கு போக்குவரத்து போலீசார் ஆலோசித்து, இப்பகுதியில் சோதனை அடிப்படையில் சில மாற்றங்களை துவங்கினர். அவ்வகையில் பி.என்., ரோட்டிலிருந்து வந்து அவிநாசி ரோடு மற்றும் காலேஜ் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும், ஐ பவுண்டசேன் வழியாக ெரயில்வே மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சென்று திரும்பி மீண்டும் புஷ்பா சந்திப்பு வந்து செல்ல வேண்டும்.
காலேஜ் ரோடு வழியாக வரும் வாகனங்கள்,ெரயில்வே மேம்பாலம் செல்ல அவிநாசி ரோடு வழியாக கீரணி சந்திப்பு, ராம் நகர் வழியாக பி.என். ரோடு அடைந்து, புஷ்பா சந்திப்பை கடந்து செல்ல வேண்டும்.அதற்கேற்ப ெரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர புஷ்பா சந்திப்பு பகுதியில் ரோட்டைக் கடக்கும் பாதசாரிகள் அனைவரும் முழுமையாக அங்குள்ள நடை மேம்பாலத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இதனால் சிக்னலுக்கு முழுமையாக வேலையே இல்லாத நிலை ஏற்படும்.இந்த நடைமுறை மாற்றம் சோதனை அடிப்படையில் ஒரு சில நாட்கள் பின்பற்றப்படும். அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின் அதற்கேற்ப இதில் மாற்றம் செய்யப்படும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.