உள்ளூர் செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் திறப்பு பல்லடம் பொதுமக்கள் தர்ணா

Published On 2023-09-07 07:29 GMT   |   Update On 2023-09-07 07:29 GMT
  • மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.
  • நகரின் மையப்பகுதியில் இந்த டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது.

பல்லடம்:

பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் மதுபான கடையில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க வருவது வழக்கம்.

இந்த நிலையில் அங்கு மது வாங்க வரும் சிலர் அங்கேயே குடித்து விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்து உறங்குவதும்,ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் என அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வருவதாக கூறி, அந்த மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுபானகடையை அகற்றக்கோரி நேற்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இது குறித்து சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது :- இந்த மதுபான கடையால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. மதுபானம் வாங்கி குடித்துவிட்டு போதைதலைக்கேறி அருகில் உள்ள கடைகளின் முன்பு குடிமகன்கள் படுத்து விடுகின்றனர். மேலும் பலர் பெண்கள் வருவது கூட தெரியாமல் அங்கேயே இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர்.

குடிமகன்கள் எந்தநேரமும் போதையில் நிற்பதால் அவ்வழியே பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பெண்கள் ஆகியோர் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். மேலும் பல்லடம்- செட்டிபாளையம் சாலை போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். மதுபானம் வாங்க வரும் குடிமகன்கள் கடை முன்பு நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த மதுபானகடையை அகற்றகோரி 15 ஆண்டுகளாக பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மதுபானகடையை அகற்றும் வரை தொடர்ந்து போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனால் மீண்டும் மதுபானகடையை அகற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்றார்.

மதுபானகடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிவில் இந்த மதுபானகடை இங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்தார்.தாசில்தாரின் இந்த அறிவிப்பை உற்சாகமாக கைதட்டி வரவேற்ற பொதுமக்கள் அங்கிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

மேலும் அந்தப் பகுதியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்த நிலையில் தாசில்தாரின் உத்தரவை மீறி மதியம் சுமார் 3 மணி அளவில் மதுபான கடை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதையடுத்து மீண்டும் அங்கு வந்த பொதுமக்கள் மதுக்கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலுக்கும் முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News