திருப்பூர் வாலிப்பாளையத்தில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
- சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன.
- இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பி வருபவர்கள் நாய்க் கும்பலிடம் சிக்கி கடிபட நேர்கிறது.
திருப்பூர்
திருப்பூர்- நொய்யல் ஆற்றங்கரை பாலம் பகுதி முதல் சக்தி தியேட்டர், யூனியன் மில் ரோடு, வாலிப்பாளையம், ஊத்துக்குளி ரோடு, வாலிப்பாளையம் முருகன், சாய்பாபா கோவில் பகுதிகளில் பகல் நேரங்களில் கும்பலாக நின்று நாய்கள் சண்டையிட்டு கொள்கின்றன. சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக அலைகின்றன. இதனால் இரு சக்கர வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:- தனியாக நடந்து செல்பவர்களை விரட்டி வந்து கடித்து விடுகிறது.
இரவு நேரங்களில் வேலைக்கு சென்று திரும்பி வருபவர்கள் நாய்க் கும்பலிடம் சிக்கி கடிபட நேர்கிறது. கும்பலாக ஒன்று சேர்ந்து கடிக்க வருவதால் என்ன செய்வது யாரை உதவிக்கு அழைப்பது என்று தெரியாமல் அச்சம் அடைகின்றனர். இது வரை கடந்த 2 மாதங்களில் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்து உள்ளது. இதில் வேதனை என்னவென்றால் காலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு செல்பவர்கள் நாய்களுக்கு பயந்து பொழுது விடிந்த பிறகு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடிக்கடி வயதானவர்கள் தான் நாய்கடிக்கு ஆளாகிறார்கள். ஆகவே இது குறித்து மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.