திருப்பூர் பழைய பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் - வாகன ஓட்டிகள்
- வேலைவாய்ப்பு தொடர்பாக தினந்தோறும் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் :
தொழில் நகரமான திருப்பூருக்கு தினந்தோறும் வேலைவாய்ப்பு தொடர்பாக வடமாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். இதனால் பஸ் நிலையங்கள், ரெயில்வே நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பனியன் நிறுவனங்களுக்கு பலர் பணிக்கு வந்து செல்வதால் காலை, மாலை மற்றும் வார விடுமுறை நாட்களில் பஸ் நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது திருப்பூர் நகரில் சில வருடங்களாக வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பழைய பஸ் நிலையம் தொடங்கி ரெயில்வே நிலையம் வரை வாகனங்கள் வரை நீண்ட வரிசையில் ஆமை வேகத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுக்கு மேலாக பழைய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் பஸ்கள் பஸ் நிலையத்தின் வெளியே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. இதுவே போக்குவரத்து நெருக்கடிக்கு காரணமாகும்.
இது குறித்து பயணிகள் கூறுகையில், தற்போது பஸ் நிலையத்தில் இறுதி கட்ட பணிகள் (ஆர்ச் அமைப்பு) நடந்து வருவதால் முன்பு போல பஸ் நிலைய வளாகத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்ற முடியவில்லை. பல்லடம் சாலையில் இருபுறங்களிலும் கோவை மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. பல்லடம், அவினாசி, அனுப்பர்பாளையம், புதிய பஸ் நிலையம் வழியாக செல்லும் அனைத்து அரசு பஸ்கள், தனியார் மினி பஸ்கள் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டியிருப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பயணிகள் நிற்பதற்கு இடம் இன்றி அவதிப்படுகின்றனர். ரோட்டில் நடந்து செல்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். நடைபாதைகளில் திடீர் கடைகள் முளைத்து உள்ளதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிற்க இடமின்றி அவஸ்தைப்படுகின்றனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. சாதாரண நாட்களிலேயே இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு நெருக்கடி இருக்கும் நிலையில், பண்டிகை நாட்களில் எப்படி இருக்கும். இந்த பகுதிகளில் முக்கிய ஜவுளிக்கடைகள், நகைகடைகள் மற்றும் மளிகைகடைகள் அதிகளவில் உள்ளன. தினந்தோறும் மக்கள் வந்து செல்கின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்புள்ளது. பஸ் நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தில் இருந்தாலும் முழுமையாக பணிகள் முடிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம். ஆகவே பழைய பஸ் நிலையம் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்வதற்கு போக்குவரத்து போலீசாரும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக மாற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றனர்.