குறு, சிறு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான மின் இணைப்பை விரைவாக வழங்க வேண்டும்
- திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
- வணிக கட்டடத்தில் இயங்கி வரும் குறு, சிறு தொழில்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
திருப்பூர் :
திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது. மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) சுமதி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ராமச்சந்திரன் முன்னிலையில் மின்வாரிய அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம் குமார் நகர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் வணிக ரீதியான கட்டடங்களில் இயங்கும் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதில் உள்ள குளறு படியை களைய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இது குறித்து அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு பொதுசெயலாளர் சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
குறு, சிறு பனியன் தொழில்கள், வணிக ரீதியான, கடைகளில் இயங்கி வருகின்றன. திருப்பூரில் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான மின் இணைப்பு வழங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. வணிக கட்டடத்தில் குறு, சிறு தொழிற்சாலைகள் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கின்றன.
மின்வரிய அலுவலர்கள், மனுக்கள் கிடப்பில் இருப்பதால் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டாமென தடுக்கின்றனர். மின் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதால் குறு, சிறு தொழில்கள் துவங்கும் தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளில் 2,500க்கும் அதிகமான புதிய வணிக நிறுவனங்கள், கடைகள், வணிக கட்டடத்தில் இயங்கி வரும் குறு, சிறு தொழில்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. தற்காலிக மின் இணைப்பில் தொழில் நடத்தி வருவதால் பல மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
கட்டிட உரிமையாளர்கள், மின் கட்டண செலவை சமாளிக்க முடியாமல் வங்கிக்கடன் தவணை செலுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். வணிக ரீதியாக கட்டியுள்ள கட்டடங்களில் இயங்கி வரும் குறு, சிறு பனியன் தொழிற்சாலைகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, மின்வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு, மின் இணைப்பு வழங்கி வருகிறோம். பதிவு மூப்பு அடிப்படையில் இணைப்பு வழங்கப்படும் என்றனர்.