செல்லப்பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்
- நாய், பூனை உள்ளிட்ட 38 செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது.
- நாட்டு ரக நாய்களையும், சிலர் விலை உயர்ந்த நாய்களையும் , பூனை, ஆடுகளையும் கொண்டு வந்தனர்.
திருப்பூர் :
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப்பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் நடந்தது. முகாமை கலெக்டர் எஸ்.வினீத் தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார், ஆணையாளர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் சிலர் நாட்டு ரக நாய்களையும், சிலர் விலை உயர்ந்த நாய்களையும் கொண்டு வந்திருந்தனர். இதேபோல் சிலர் பூனை, ஆடுகளையும் கொண்டு வந்தனர்.
இந்த முகாமில், நாய், பூனை உள்ளிட்ட 38 செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. இதே–போல் 9 தெருநாய்களுக்கு கால்நடை மருத்துவர்கள் கருத்தடை அறுவை சிகிச்சையும் மேற்கொண்டனர். இது தவிர இந்த முகாமில் சாதாரண தடுப்பூசி போடுதல், மற்றும் வழக்கமான பல்வகை நோய்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. முகாமில், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர்(பொறுப்பு)சக்திவேல் பாண்டியன், திருப்பூர் கோட்ட உதவி இயக்குனர் வெங்கடேசன், தமிழ்நாடு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெறிநோயின் அறிகுறி மற்றும் சிகிச்சை குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:-
வெறிநாய் கடிப்பதால் ஏற்படும் 100 சதவீத உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வாகும். இதில் கொடூர வகை நோய் பாதிப்பு கொண்ட நாய்க்கு உமிழ் நீர் அதிகம் சுரந்து நுரையுடன் வழியும். உணவு உட்கொள்ளாது. கீழ் தாடை தாழ்ந்து வாய்மூட முடியாமல் இருக்கும். நாக்கு தாமிர நிறத்தில் பழுத்த அல்லது கொழுந்து மா இலை போன்றிருக்கும். எதிர்வரும் நபர்கள், விலங்–குகளை கடித்துக்கொண்டே ஓடும்.
மனிதர்களுக்கு வெறி நாய் கடித்து விட்டால் கடித்த நாளிலிருந்து 3,7,14,28 ஆகிய நாட்களில் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும். நாய் கடித்த உடன் கடிபட்ட இடத்தை தண்ணீர் ஊற்றி வழிந்தோடும்படி கழுவ வேண்டும். கார்பாலிக் அமிலம் கலந்த சோப்பு போட்டு கழுவுதல், டிஞ்சர், அயோடின் பஞ்சில் நனைத்து காயத்தில் வைத்தல் போன்றவைகளை செய்வதன் மூலம் காயத்தில் பரவும் வைரஸ் கிருமியின் எண்ணிக்கையை குறைக்கலாம். அதற்கடுத்து மருத்துவரை அணுகி தடுப்பூசி போட வேண்டும்.இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.