உடுமலை அருகே குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர்
- ஜீவா நகர், ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
- வடிகால் வசதி இல்லாத நிலையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது.
உடுமலை :
உடுமலை அருகே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் தனி தீவாக மாறி உள்ளது. உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி ஜீவா நகர் ,ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதியான இந்த குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
சரியான வடிகால் வசதி இல்லாத நிலையில் பல அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் குப்பைக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து தேங்கியுள்ளதால் துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியில் வர முடியாத நிலை உள்ளதோடு பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் நான்கு நாட்களாக வடியாமல் உள்ளதால் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
எனவே தேங்கியுள்ள நீரை அகற்றவும் உரிய மழை நீர் வடிகால் வசதிகள் மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.