ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை - ஒருவர் கைது, மோட்டார் சைக்கிள் பறிமுதல்
- மோட்டார் சைக்கிளில் 150 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
- 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இசக்கி, கார்த்தி மற்றும் போலீஸ்காரர்கள் திருப்பூர் தாராபுரம் பகுதியில் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது தாராபுரம் மூலனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் 150 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவர் குளத்துப்பாளையம் குலுக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்த உமாநாத் (வயது 47) என்பதும் மேலும் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உமாநாத் பல்வேறு இடங்களில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.