சிறு தானிய சாகுபடி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்
- சர்வதேச அளவில் அடுத்தாண்டு (2023) சிறு தானியங்களுக்கான ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது.
- விவசாயிகளிடம் இருந்து, ஜி.எஸ்.டி., தொகையை மட்டும் வசூலித்துக் கொண்டு, இலவசமாக விதைகள் வழங்கப்படுகின்றன.
அவிநாசி :
சர்வதேச அளவில் அடுத்தாண்டு (2023) சிறு தானியங்களுக்கான ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சிறு தானிய சாகுபடி குறித்த விழிப்புணர்வு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அவிநாசி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து 3பிரசார வாகனங்கள் நகர, கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டன. பிரசார பயணம் துவக்க நிகழ்ச்சி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை தலைவர் சின்ன கண்ணன் தலைமையில் நடந்தது.
இது குறித்து வேளாண்மை துறையினர் கூறியதாவது:- அவிநாசி வட்டாரத்தில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சிறு தானியப் பயிரான சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. கோ -32, கே-12 ரக விதைகளை பயன்படுத்துவதன் மூலம் ஏக்கருக்கு 1,000 கிலோ வீதம் மகசூல் கிடைக்கிறது.
தீவனம் மற்றும் தானிய தேவைக்கும் சோளம் பயன்படுத்திக் கொள்ள முடியும். விவசாயிகளுக்கு கோடை உழவு மானியம், மானிய விலையில் நுண்ணூட்டம் உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
100 முதல் 250 ஏக்கர் பரப்பளவில் செயல் விளக்கத்திடல் அமைத்து விவசாயிகளிடம் இருந்து, ஜி.எஸ்.டி., தொகையை மட்டும் வசூலித்துக் கொண்டு, இலவசமாக விதைகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள் சுஜி, சத்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் சின்னராஜ், வினோத், நாகராஜ், தினேஷ், சம்பத்குமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.