வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமை செயல்பட அனுமதி
- பல்வேறு வழக்குகள் நிலுவை தொடர்பாக, பணியிடம் நிரப்புவதில் ஆண்டுக்கணக்கில் இழுபறி நீடிக்கிறது.
- சனிக்கிழமை வேலை நாள் பணிகளை மண்டல அளவில் போக்குவரத்து இணை கமிஷனர்கள் கண்காணித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
திருப்பூர்:
மாநிலம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) 5 ஆய்வாளர்கள் பணிபுரிய வேண்டிய இடங்களில் இருவரும், 3 பேர் பணியாற்ற கூடிய இடங்களில் ஒருவரும் பணிபுரிகின்றனர்.பல்வேறு வழக்குகள் நிலுவை தொடர்பாக, பணியிடம் நிரப்புவதில் ஆண்டுக்கணக்கில் இழுபறி நீடிக்கிறது. இதனால் ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், நிலுவையில் உள்ள ஓட்டுனர் உரிம விண்ணப்பங்களுக்காக டெஸ்டிங் பணி மட்டும் சனிக்கிழமைகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பணி நாளாக மாற்றினால், முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி, செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
சனிக்கிழமை வேலை நாள் பணிகளை மண்டல அளவில் போக்குவரத்து இணை கமிஷனர்கள் கண்காணித்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
இதுதொடர்பாக போக்குவரத்து துறை ஆணையர் தரப்பில் இருந்து, அனைத்து ஆர்.டி.ஓ.,க்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.