திருப்பூர் மாநகரில் சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் செல்ல புதிய திட்டம் செயல்படுத்த ஒத்திகை
- திருப்பூரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
- சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
திருப்பூரில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குமரன் சாலை, மங்கலம் சாலை, பல்லடம் சாலை, அவிநாசி சாலை, பி.என்.ரோடு உள்ளிட்ட பிரதான இடங்களில் அதிக அளவிலான வாகன போக்குவரத்து எப்பொழுதும் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. திருப்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் போக்குவரத்து நெரிசல் இருந்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலால் மங்களம் செல்லக்கூடிய வாகனங்கள் வளர்மதி பாலம் வரை நீண்ட வரிசையில் நிற்கின்றது. அதேபோன்று ரயில் நிலையம் மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் பல்லடம் சாலையில் உள்ள பாலம் வரை நிற்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால் வாகனங்கள் சிக்னலில் நீண்ட நேரம் நிற்க அவசியம் ஏற்படாது.
இதையடுத்து திருப்பூர் மாநகராட்சி சிக்னலில் இதற்கான ஒத்திகை நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி சிக்னல் அணைத்து வைக்கப்பட்டு வழி மாற்றம் செய்தனர். குமரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பல்லடம் சாலைக்கும், மங்கலம் சாலைக்கும் சிக்னலில் நிற்காமல் சென்றது .
அதேபோன்று பல்லடம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பூங்கா சாலை வழியாக செல்லாமல் தாடிக்காரன் முக்கு வழியாக நட்ராஜ் தியேட்டர் சென்று ெரயில் நிலையம் சென்றது. இந்த ஒத்திகையால் எப்பொழுதும் பரப்பரப்பாக காணப்படும் பூங்கா சாலை நேற்று இரவு 7,30 மணிக்கு வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சிக்னல் ப்ரீ ரோடு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் இனி நீண்ட நேரம் சிக்னலில் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.