உப்புப்பாளையம் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை
- 11 பேருக்கு கடந்த 2022 ம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், இதுவரை நிலம் அளந்து கொடுக்கப்படவில்லை
- உப்புப்பாளையம் பகுதியில் கடந்த 2007 ம் ஆண்டு நிலமெடுப்பு செய்யப்பட்டு 61 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளக்கோவில் உள்வட்டத்தைச் சோ்ந்த பகுதிகளுக்கு காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவா் ச.கருப்பையா அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் வட்டம், வெள்ளக்கோவில்-உப்புப்பாளையம் பகுதியில் கடந்த 2007 ம் ஆண்டு நிலமெடுப்பு செய்யப்பட்டு 61 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.இதில், தகுதி இல்லாத 20 நபா்களின் பட்டாவை ரத்து செய்ய கோரியும், உப்புப்பாளையம், குட்டக்காட்டு புதூா் ஆகிய பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்க வலியுறுத்தியும் அரசு அதிகாரிகளுக்கும், காங்கயம் ஆதிதிராவிட நலத் துறை தனி வட்டாட்சியருக்கும் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் உப்புப்பாளையத்தை சோ்ந்த 11 பேருக்கு கடந்த 2022 ம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட நிலையில், இதுவரை நிலம் அளந்து கொடுக்கப்படவில்லை. எனவே உப்புப்பாளையம் பகுதியில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் பட்டா வழங்கப்பட்டவா்களுக்கு நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.