கியாஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூல் புகார்கள் தெரிவிக்க உதவி மையம் அமைக்க கோரிக்கை
- மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
- சிலிண்டர் டெலிவரி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.
திருப்பூர்
கியாஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். கியாஸ் நுகர்வோர், நுகர்வோர் அமைப்பினர் மனுக்கள் வழங்கினர்.
அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் சரவணன் அளித்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில், கியாஸ் சிலிண்டருக்கு 50 ரூபாய் கூடுதல் தொகையை நுகர்வோரிடமிருந்து டெலிவரி மேன்கள் கட்டாய வசூல் செய்கின்றனர்.
ஏற்கனவே சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், பில் தொகையை விட கூடுதல் தொகை வசூலிப்பது பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது.சிலிண்டர் டெலிவரி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பது கூட பலருக்கு தெரிவதில்லை. சிலிண்டர் கட்டணம் குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கியாஸ் கட்டணம் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட அளவில் தனி உதவிமையம் அமைத்து தொடர்பு எண் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.