1.75 லட்சம் எண்ணிக்கையில் திருப்பூர் நிறுவனங்களுக்கு கோடை கால ஆடை தயாரிப்பு ஆர்டர்
- தொழில் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என தொழில் முனைவோர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
- 2 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தை ஆடை தயாரிப்புக்காக இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
கொரோனா தொற்று, அபரிமிதமாக உயர்ந்த நூல் விலை, ரஷ்யா - உக்ரைன் போர் என அடுத்தடுத்து தொடரும் பிரச்சினைகளால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை குறைந்துள்ளது.இருப்பினும் தொழில் மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என தொழில்முனைவோர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அதற்கு அச்சாரமாக பிரான்ஸ் நாட்டு வர்த்தகரிடமிருந்து, 2023ம் ஆண்டுக்கான கோடை காலத்துக்காக 1.75 லட்சம் எண்ணிக்கையில் ஆடை தயாரிப்பு ஆர்டர் திருப்பூருக்கு கிடைத்துள்ளது. ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு வர்த்தக முகமை நிறுவனம் பிரான்ஸ் வர்த்தகரிடமிருந்து, திருப்பூர் நிறுவனங்களுக்கு இந்த ஆர்டரை பெற்று தந்துள்ளது.ஆர்டர் வழங்கிய பிரான்ஸ் வர்த்தகரின் தர ஆய்வு குழுவினரான சில்வின் மார்ட்டின், எலிஸ் பெலாட், லாரா ஆகியோர் திருப்பூர் வந்து பின்னலாடை தயாரிப்பு பணிகள், துணி, ஆடையின் தரத்தை ஆய்வு செய்தனர்.
இது குறித்து வர்த்தக முகமை நிறுவன பிரதிநிதி சசீதரன் கூறியதாவது:-
வழக்கத்தைவிட 30 சதவீதம் குறைவாக 2023 ம் ஆண்டு கோடைக்கான ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வழங்கியுள்ளனர். 2 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தை ஆடை தயாரிப்புக்காக இந்த ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஸ்டைலுக்கும் வெவ்வேறு வண்ணம் என்கிற நிலை மாறி, ஒரு ஸ்டைலில் இரண்டு வண்ணங்களில் ஆடை தயாரிக்க கோருகின்றனர். இதனால் டிசைன்களை உருவாக்கும் செலவினம் குறைகிறது. நூல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆடை விலையையும் சற்று உயர்த்தி வழங்குகின்றனர். எத்தகைய சூழலிலும் குழந்தைகளுக்கான ஆடை தேவை குறைவதில்லை என்றனர்.