பால் கொள்முதல் செய்து ரூ.40 லட்சம் மோசடி - பால் பண்ணை உரிமையாளர்கள் உள்பட 3 பேர் கைது
- பாதிக்கப்பட்ட விவசாயிகள் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- நிறுவனத்தின் சார்பில் மாதக்கணக்கில் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூரை அடுத்த கொடுவாய் செங்காட்டுப்பாளையத்தில் தனியார் பால் பண்ணை நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் சார்பில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 450-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து வந்தனர்.
இந்த நிலையில் தனியார் நிறுவனத்துக்கு பால் கொடுத்த விவசாயிகளுக்கு, அந்த நிறுவனத்தின் சார்பில் மாதக்கணக்கில் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். அதன்பிறகு பால் பண்ணையை மூடிவிட்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவானார்கள்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 450-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் ரூ.40 லட்சத்துக்கு மோசடி நடந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக தனியார் பால் பண்ணை உரிமையாளர்களான செங்காட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார்(வயது 34), அவருடைய தம்பி சுந்தரமூர்த்தி(32), பண்ணை மேலாளரான இவர்களின் உறவினர் ஜெகதீஷ்(28) ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் துறையூராகும். மேலும் இதில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.