கோவில் அர்ச்சகர்களின் வாரிசுகளுக்கு கல்வி உதவித்தொகை
- புதிதாக பணியில் இணைந்தவர்களில் 40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் உள்ளனர்
- அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்டோர் மிகவும் குறைந்த சம்பளத்தில் தான் வேலை பார்க்கின்றனர்.
பல்லடம்:
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள், உள்ளிட்டோர் அவர்களது குழந்தைகளின் கல்விச்செலவுக்காக சிரமப்படுகின்றனர்.
இதனடிப்படையில் தமிழ்நாடு அரசு ஒரு கால பூஜை திட்ட கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகளின் வாரிசுகளுக்கு உயர்கல்விக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்து கோவில் பூசாரிகள் சங்க மாநிலத் தலைவர் வாசு கூறியதாவது:-
ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்டோர் மிகவும் குறைந்த சம்பளத்தில் தான் வேலை பார்க்கின்றனர். தமிழ்நாடு அரசின் இந்த திட்டம் உண்மையில் அவர்களுக்கு பயன் அளிப்பதாகவே கருதுகிறோம். இருந்தாலும் 60 வயதுக்கு மேற்பட்ட பூசாரிகள் பலர் சமீபத்தில் தான் ஓய்வு பெற்றனர்.
தற்போது புதிதாக பணியில் இணைந்தவர்களில் 40 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகம் உள்ளனர். இவர்களின் வாரிசுகள் உயர்கல்வி படிக்கும் வயது அடைந்து இருப்பார்களா என்பது சந்தேகமே ? இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தினால் எண்ணற்ற அர்ச்சகர்கள், பூசாரிகள் நிச்சயம் பயனடைவார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.