சேவூர் சித்தர் முத்துக்குமாரசாமி ஜீவ பிருந்தாவனத்தை இந்து சமய அறநிலையத்துறையுடன் சேர்க்க வேண்டும் - முதல்-அமைச்சருக்கு மனு
- சித்தர் முத்துக்குமாரசுவாமி 300 ஆண்டுகளுக்கு முன் நவகண்டம் கொடுத்து ஜீவ சமாதி அடைந்த ஜீவ பிருந்தாவனம் உள்ளது.
- செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, அமாவாசை, பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது.
அவினாசி :
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சேவூர் சித்தர் முத்துக்குமாரசாமி ஜீவ பிருந்தாவனத்தின் பராமரிப்பாளரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான காந்தி என்கிற வே.சுப்பிரமணியன் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- காஞ்சிபுரத்தை சேர்ந்த சித்தர் முத்துக்குமாரசுவாமி 300 ஆண்டுகளுக்கு முன் நவகண்டம் கொடுத்து ஜீவ சமாதி அடைந்த ஜீவ பிருந்தாவனம் சேவூர் வடக்கு வீதி முசாபுரி தோட்டத்தில் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு ஜீவசமாதியை புனரமைத்து அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்போடு கிரானைட் தரைத் தளம், பிரதான மண்டபம், முன் மண்டபம், மின் வசதி, குடிநீர் வசதி ஆகிய வசதிகள் செய்யப்பட்டு, நெடுஞ்சாலை துறையின் அனுமதியோடு கம்பிவேலியும் அமைக்கப்பட்டது. தற்போது அனைத்தும் சமுதாயத்தினரும் நாள்தோறும் வழிபாடு, தியானம் செய்யும் அமைதியான இடமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, அமாவாசை, பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்று வருகிறது.
ஜீவசமாதி அனைவருக்கும் அனைத்து குழுவினருக்கும் சொந்தமானது. இந்த ஜீவசமாதி இந்துசமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அழகுநாச்சி அம்மன் கோவில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்டது. ஜீவ பிருந்தாவனத்தை, அழகு நாச்சியம்மன் திருக்கோவிலுக்கு உள்பட்டதாக சேர்க்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.