உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பாத்திர தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்து

Published On 2023-04-06 10:36 GMT   |   Update On 2023-04-06 10:36 GMT
  • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
  • 29.5 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பித்தளை, செம்பு, வார்ப்பு பாத்திரங்கள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து பின்னர் உற்பத்தியாளர்களுடன் பேசி முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமர–ம்) செந்தில்குமரன் முன்னிலையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பாத்திர வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைவர் மனோகரன், செயலாளர் முத்தையா, பொருளாளர் குமார் உள்ளிட்டவர்களும், தொழிற்சங்கம் சார்பில் கண்ணபிரான், தேவராஜ் (ஏ.டி.பி.), குப்புசாமி, குருணாமூர்த்தி (சி.ஐ.டி.யு.), வேலுச்சாமி, ரத்தினசாமி (எல்.பி.எப்.), செல்வராஜ், நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), திருஞானம், அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.), பரமேஸ்வரன், அசோக் (ஐ.என்.டி.யு.சி.), சீனிவாசன், லட்சுமிநாராயணன் (பி.எம்.எஸ்.), அர்ஜூனன், ஆறுமுகசாமி (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருதரப்பினரின் கருத்துக்களையும் கேட்கப்பட்டது. தொழில் அமைதி ஏற்படுத்தும் வகையில் இருதரப்பினர் ஏற்றுக்கொண்டபடி ஒப்பந்தமானது. அதன்படி பித்தளை, செம்பு, வார்ப்பு அயிட்டங்கள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் கூலியுடன் 22.5 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். பித்தளை ஈயப்பூச்சு அயிட்டமான டேசாவுக்கு 29.5 சதவீதம் கூலி உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். இந்த கூலி உயர்வு 1-1-2023 முதல் 3 ஆண்டுகளுக்கு அதாவது 31-12-2026 வரை அமலில் இருக்கும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுபோல் எவர்சில்வர் பாத்திர உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக கூலி உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. திருப்பூர் வட்டார முழு கூலி பட்டறைதாரர்கள் சங்கம் தரப்பில் தலைவர் துரைசாமி, துணை தலைவர்கள் குமாரசாமி, மதிவாணன், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர். தொழிற்சங்கம் தரப்பில் வேலுச்சாமி (எல்.பி.எப்.), ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.), தேவராஜ் (ஏ.டி.பி.), நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.), அப்புக்குட்டி (எச்.எம்.எஸ்.), சீனிவாசன் (பி.எம்.எஸ்.), அசோக் (ஐ.என்.டி.யு.சி.), அர்ஜூணன் (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

எவர்சில்வர் பாத்திர தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தற்போது 2020-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் கூலியுடன் சேர்த்து 16 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும். இந்த கூலி உயர்வு 1-1-2023 முதல் வருகிற 31-12-2026 வரை அமலில் இருக்கும் என்று ஏற்கனவே ஒப்பந்தம் கையெழுத்தானது.

Tags:    

Similar News