பல்லடத்தில் மாநில அளவிலான சிலம்ப போட்டி
- போட்டியில் 300 பள்ளி குழந்தைகள், மாணவர்கள் உட்பட ஏராளமான சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர்.
- அதிக பதக்கங்கள் வென்ற மாவட்ட சிலம்பாட்ட சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் அருகே சின்னக்கரையில் உள்ள பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு பாரம்பரிய சிலம்பாட்ட சங்கத்தின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் திருப்பூர்,சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இருந்து சுமார் 300 பள்ளி குழந்தைகள், மாணவர்கள் உட்பட ஏராளமான சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர்.
சர்வதேச பாரம்பரிய சிலம்ப கலை சம்மேளன தலைவர் டாக்டர் மோகன் மற்றும் பார்க் கல்லூரி முதல்வர் சரவணன் ஆகியோர் சிலம்ப போட்டியை தொடங்கி வைத்தனர். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சப்-ஜூனியர் பிரிவிலும், 11 முதல் 15 வயது வரை உள்ள மாணாக்கர்களுக்கு ஜூனியர் பிரிவிலும், 40 வயது வரை உள்ளவர்களுக்கு சீனியர் பிரிவிலும் ஒற்றை கம்பு, சிலம்பம், இரட்டை கம்பு சிலம்பம், தனித்திறமை போட்டிகள் மற்றும் சுருள்வாள் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அதிக பதக்கங்கள் வென்ற மாவட்ட சிலம்பாட்ட சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கோப்பை வழங்கப்பட்டது.நேற்று நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருகிற நவம்பர் மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என சிலம்பாட்ட சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.