உள்ளூர் செய்திகள்

உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை படத்தில் காணலாம்.

உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Published On 2023-06-05 05:56 GMT   |   Update On 2023-06-05 05:56 GMT
  • ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர்.
  • போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலை :

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உடுமலை அருகே எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வருகிறது.

இங்கு மின்சார பணியாளர், பொருத்துநர், கம்மியார் மோட்டார் வாகனம், கம்பியாள், பற்ற வைப்பவர் உள்ளிட்ட பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நடப்பாண்டில் புதிதாக இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் - டிஜிட்டல் மேணுபேக்ச்சரிங் டெக்னீசியன், மேணுபேக்ச்சரிங் பிராசஸ் கண்ட்ரோல் - ஆட்டோமேஷன், அட்வான்ஸ் சி .என் .சி மெஷின் - டெக்னீசியன் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அரசு உதவிகளுடன் பயிற்சியின்போது தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்தோடு சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் இந்தத் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டப்படவில்லை. இதனால் போதை ஆசாமிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடிபோதையில் பாட்டில்களை உடைத்து தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பரவலாக வீசியும் வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் காம்பவுண்ட் சுவர் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே உடுமலை எலையமுத்தூர் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News