உள்ளூர் செய்திகள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற காட்சி.

வடமாநிலத்தினர் குறித்து வதந்தி பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எச்சரிக்கை

Published On 2023-03-07 04:56 GMT   |   Update On 2023-03-07 04:56 GMT
  • சட்டம்-ஒழுங்கு மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
  • பீகார், ஜார்கண்ட் மாநில அரசு அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் போதை ஒழிப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடந்தது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, எஸ்.பி., சஷாங் சாய், துணை கமிஷனர் அபிஷேக் குப்தா உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் அமைச்சர் மு.சாமிநாதன் பேசியதாவது:-

வடமாநிலத்திலிருந்து, தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் பாதுகாப்பு குறித்து முதல்வர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். திருப்பூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்த நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து பீகார், ஜார்கண்ட் மாநில அரசு அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர். அவர்களின் பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என்று பாராட்டு தெரிவித்தனர். வடமாநிலத்தினர் சொந்த ஊருக்கு, பண்டிகையை முன்னிட்டு சென்றுள்ளனர். தவிர பயந்தோ, அச்சுறுத்தலுக்குட்பட்டோ செல்லவில்லை. வதந்தி பரப்புவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புகார்கள் ஏதும் வந்தால், உடனடி நடவடிக்கை, சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

Similar News