உள்ளூர் செய்திகள்

வேலை நிறுத்தம் வாபஸ்: பல்லடத்தில் கல்குவாரிகள் செயல்படத் தொடங்கின

Published On 2023-07-05 06:47 GMT   |   Update On 2023-07-05 06:47 GMT
  • சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி, மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது.
  • சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பல்லடம்:

பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்குவாரி, மற்றும் கிரஷர்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கல்குவாரி தொழிலுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கவும், லைசன்ஸ் வழிமுறைகளை எளிதாக்கவும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கவும் வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஜூன்.26 ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 9 நாட்களாக பல்லடம் பகுதியில் பல கல்குவாரிகள், கிரஷர்கள், டிப்பர் லாரிகள் இயங்கவில்லை. பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் ஒரே இடத்தில் 700 க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டத்தால் சுமார் ரூ.1600 கோடி அளவிற்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக கல்குவாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து பல்லடத்தில் கல்குவாரிக ள் கிரசர்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கின.

Tags:    

Similar News